போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பொருத்து வீடுகள் பலமான அடித்தளத்தையோ அல்லது பலமான கூரை வசதிகளையோ கொண்டிருக்கவில்லை எனவும் நீண்ட காலப் பாவனைக்குப் பொருத்தமற்றவை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்கள் தமது தொழினுட்ப ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

லக்சம்பேர்க்கைத் தளமாகக் கொண்ட ‘ஆர்செலோர் மிட்டல்’ என்ற நிறுவனத்தின் இத்திட்டமானது சீமெந்து வீடுகள் போன்று நீண்டகாலம் நிலைத்து நிற்காது எனவும், இந்த வீடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவோ அல்லது திருத்தவோ முடியாது எனவும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்பொருத்து வீடுகள் காற்றோட்டம் அற்றவை எனவும் அடுப்பு மற்றும் புகைபோக்கியைக் கொண்டிருக்கவில்லை எனவும் மொறட்டுவப் பல்கலைக்கழக வல்லுனர்களின் விரிவான ஆய்வின் இறுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளை உருவாக்குவதால் உள்ளுர் மக்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெறமுடியாது எனவும் இதனால் உள்ளுர் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

பொருத்து வீடுகள் தொடர்பான ஆய்வின் ஆரம்ப கட்ட அறிக்கையானது பேராசிரியர் பிறியன் டயஸ், கலாநிதி றஞ்சிகா ஹல்வதுற (இருவரும் பொறியியலாளர்கள்) மற்றும் கட்டட வடிவமைப்பாளரான வருண டீ சில்வா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இம்மூன்று வல்லுனர்களும் இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து ஆர்செலோர் மிட்டல் நிறுவனத்தால் கட்டப்பட்ட பொருத்து வீடுகளுடன், ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்டப்பட்ட 50,000 வரையான சுவர்கள் எழுப்பப்பட்ட சீமெந்து வீடுகளை ஒப்பீடு செய்து தமது அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

பொருத்து வீடுகளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையும் சமூக அமைப்புக்கள் மற்றும் ஏனைய பல்வேறு தரப்பினரால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 65,000  பொருத்து வீடுகளைக் கட்டுவதற்கான தனது பரிந்துரையை சிறிலங்கா மீள்குடியேற்ற அமைச்சு வழங்கியுள்ளது.

மொறட்டுவப் பல்கலைக்கழக பொறியியல் வல்லுனர்களால் வெளியிடப்பட்ட பொருத்து வீடுகளின் பின்விளைவுகள் தொடர்பான முழுமையான அறிக்கையின் பிரதி ‘த சண்டே ரைம்ஸ்’ ஊடகத்திடம் உள்ளது. இந்த வீடுகளின் தொழினுட்ப சார் பிரச்சினைகளையே வல்லுனர்கள் அதிகம் முக்கியத்துவப்படுத்தியுள்ளனர். இந்த பொருத்து வீடுகளுக்கான அத்திவாரமானது 150 மில்லிமீற்றர் அகலத்துடன் போடப்பட்டுள்ளதாகவும், ஆனால் வழமையாக கட்டப்படும் வீடுகளின் அத்திவாரமானது 450 மில்லிமீற்றர் அகலத்தில் இடப்படுகிறது எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

‘இந்த வகையான பொருத்து வீடுகள் வெள்ளப்பெருக்கு மற்றும் கடும்மழையைக் கூடத் தாங்கக்கூடிய பலமற்ற வீடுகளாகக் காணப்படும். ஏனெனில் இந்த வீடுகளின் அத்திவாரத்தின் கீழே மண்ணரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறும் உள்ளதால் இது கனமழையைக் கூடத் தாங்கும் சக்தியற்றதாக அமையும்’ என வல்லுனர்களின் தொழினுட்ப ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழமையாக நிர்மாணிக்கப்படும் சீமெந்து வீடுகளின் அத்திவாரமானது 450 மில்லி மீற்றர் ஆழத்திலும், 300 மில்லிமீற்றர் அடிப்பீடத்துடனும் பாரிய கற்கள் இடப்பட்டு மிகப் பலமாக உருவாக்கப்படுகிறது. இவ்வாறான பலமான அத்திவாரமானது எந்தவொரு காலநிலைக்கும் குறிப்பாக வெள்ளப் பெருக்கின் போது எவ்வித ஆபத்துமின்றி நிமிர்ந்து நிற்கவல்லது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

‘கடல்மட்டத்திற்கு அருகிலுள்ள பிரதேசங்களில் இவ்வாறான பொருத்து வீடுகளின் அத்திவாரமானது தாக்குப் பிடிக்க முடியாது. குறிப்பாக இப்பொருத்து வீடுகளில் துவாரமிடுதல், சுவரில் ஆணி அடித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியவை அல்ல. இவ்வாறான ஆபத்துக்கள் குறைந்தது 10 ஆண்டுகளுக்குள் இடம்பெறும்’ என வல்லுனர்கள் தமது அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.

‘பொருத்து வீடுகளில் கதவுச் சட்டங்களைப் பொருத்தும் போது மிகக் கவனமாகக் கையாள வேண்டும். ஏனெனில் இவை பலமற்ற வீடுகளாக உள்ளமையே இதற்குக் காரணமாகும்.  இந்த வீடுகளில் இலத்திரனியல் பாகங்களைப் பொருத்தும் போது அவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டிய தேவை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றில் ஏற்பட்டது. இந்தப் பொருத்து வீடுகளின் கதவுப் பிணைச்சல்கள் மிகவும் சிறியவையாகவும் எளிதில் பழுதடையக் கூடியவையாகவும் உள்ளன’ என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் வழமையாகக் கட்டப்படும் புறவுருவச் சுவர்களைக் கொண்ட வீடுகள் இவ்வாறான பாதிப்புக்களைக் கொண்டிருக்கவில்லை. இதற்கு இவற்றின் சுவர்கள் மற்றும் தூண்கள் போன்றன உறுதியாக உள்ளமையே காரணமாகும். பொருத்து வீடுகளின் கதவுகள் மற்றும் யன்னல்களின் உச்சிகள் மற்றும் கூரைகளுக்கு இடையிலான கம்பிகள் போன்றவற்றுக்கு இடையில் திறப்பதற்கான வசதிகள் காணப்படவில்லை.

‘இவ்வாறான மோசமான வீட்டின் அமைவானது, வெயில் காலத்தில் வீட்டினுள் உருவாகும் வெப்பக் காற்றை வெளியேறுவதற்கு அனுமதிக்காது. இதனால் வீடு காற்றோட்டமற்றதாகக் காணப்படும். இவ்வாறான பொருத்து வீடுகள் குளிர்காலத்திற்கும் மற்றும் குளிரூட்டிகளைப் பயன்படுத்தும் போது மட்டுமே பொருத்தமானதாக இருக்கும்’ என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘புறவுருவச் சுவர்களைக் கொண்ட வீடுகளுக்கு ஒழுங்குமுறையாகக் கம்பிகள் வைக்கப்பட்டிருக்கும். இதற்கப்பால், சுவர்களுக்கும் கூரைக்கும் இடையில் இடைவெளி காணப்படும். இதன் மூலம் அசுத்தக் காற்று வெளியேறவும் சுத்தமான காற்று உள்வருவதற்குமான இடைவெளி கிடைக்கிறது. இந்த வகையான வீடுகள் வெயிற் காலத்திற்கு மிகப் பொருத்தமானவையாக இருக்கும்.

பொருத்து வீடுகளின் யன்னல்கள் மிகச் சிறியவையாக உள்ளதால் இவை தரமான காற்றோட்ட வசதியைத் திருப்திப்படுத்தவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘யன்னல்கள் பொருத்தப்பட்டுள்ள நிலை காரணமாக இவற்றை அரைவாசியாக மட்டுமே திறக்க முடியும். இவற்றைத் திறந்து வைப்பதற்கான பாதுகாப்புப் பொறிமுறைகள் செய்யப்படவில்லை. இதேபோன்று இந்த வீடுகளில் அடுப்பு மற்றும் புகைபோக்கிகள் போன்றன காணப்படவில்லை. ஏனெனில் வீடுகளைப் பெறும் பயனாளிகள் பெருமளவில் விறகுகளைப் பயன்படுத்தியே தமது சமையலை மேற்கொள்கின்றனர். ஏனெனில் இவர்களுக்கு எரிவாயுக்களைப் பெறுவதற்கான வசதி இல்லை. வீட்டிற்கு வெளியே சமையலறை கட்டப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. இவ்வாறான ஏற்பாடுகள் பொருத்தமற்றவையாகும்.

வழமையாக நாங்கள் அமைக்கும் வீடுகளில் நீண்ட காலமாக அடுப்பு மற்றும் புகைபோக்கிகள் அமைக்கப்படுகின்றன. இவை மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன. இந்த வகை வீடுகள் எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்படுகின்றன’ என மொறட்டுவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘வழக்கத்திற்கு மாறாக நிர்மாணிக்கப்படும் பொருத்து வீடுகள் திருத்துவது கடினமானதாகும். இது தொடர்பான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சுவர்களைக் கொண்ட வீடுகள் பழுதடைந்தால் அவற்றைத் திருத்துவதற்கான வளங்களை இலகுவாகப் பெறமுடியும். பொருத்து வீடுகளின் பாவனைக்காலம் 30 ஆண்டுகளாகும். ஆனால் சுவர்களைக் கொண்ட சீமெந்து வீடுகளின் பாவனைக் காலம் 50-60 ஆண்டுகளாகும். இவை அடுத்த தலைமுறையினராலும் பயன்படுத்தப்பட முடியும். ஆனால் பொருத்து வீடுகள் அப்படியல்ல. இவற்றை அமைப்பதற்கான காலம் ஒப்பீட்டாளவில் குறைவானதாகும். ஆனால் ஏற்கனவே கட்டப்பட்ட 50,000 வரையான புறவுருவச் சுவர் வீடுகளுடன் ஒப்பிடும் போது தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 65,000 பொருத்து வீடுகள் மிகவும் வேறுபாடானவையாகும்’ என வல்லுனர்கள் தமது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

பொருத்து வீடுகளை அமைப்பதற்கு மிகக் குறைந்த மண் தேவைப்படுவதாகவும் அத்துடன் மரம் பயன்படுத்தப்படுவது மிகமிகக் குறைவு என்பதால் இயற்கை வளங்கள் அழிவடைவது தடுக்க இவ்வகையான வீடுகளை நிர்மாணித்தல் உதவும் எனவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் 50,000 வீடுகள் கட்டப்பட்ட போது இவ்வாறான வளங்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படவில்லை என்பதையும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வேறு புதிய வளங்களைப் பயன்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதுடன், மாற்றுத் தொழினுட்பங்களை உட்சேர்ப்பதன் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள புறவுருவச் சுவர் வீடுகளை அமைப்பதே சாலச் சிறந்தது என வல்லுனர்கள் தமது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வழிமூலம்        – சண்டேரைம்ஸ்
ஆங்கிலத்தில்  – நமினி விஜேதாச
மொழியாக்கம் – நித்தியபாரதி