வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன்மீது நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ரெலோ கட்சியின் தலைவர் சிறிகாந்தாவுக்கு உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழர் விடுதலைக் கழகம் (ரெலோ) கடந்த 13ஆம் நாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
அதில் ரெலோ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண அமைச்சில் அங்கம் வகிக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரனைப் பதவி நீக்கம் செய்வதுடன், அப்பதவிக்கு தங்களால் சிபாரிசு செய்யப்படும் நபரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அக்கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
உங்கள் கடிதம் கிடைத்தது. அதன் உள்ளடக்கங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. ஏற்கனவே அமைச்சர் பா.டெனீஸ்வரன் எமது விசாரணைக்குழு முன் தான் தெரிபடமாட்டார் என்று பகிரங்கமாகக் கூறியதை முன்வைத்தும் வேறு காரணங்களுக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தேன். எனவே உங்கள் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவன என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.