”துணை முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வராக முயற்சி செய்கிறார். அதற்குத்தான் பிரதமர் என்னிடம் அதைச் சொன்னார்; இதைச்சொன்னார் என்று கதை விடுகிறார்,” என சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
18 எம்.எல்.ஏ., க்களின் வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.அங்கிருப்பவர்கள் எங்கள் உறவினர்கள், பங்காளிகள்தான். ஆட்சி போய்விடக்கூடாது என்பதற்காக அங்கு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு நீண்ட நாட்களாக என்னுடன் தொடர்பில் உள்ளார். பிரபுவின் மனநிலையிலேயே அனைவரும் உள்ளனர். நிறையபேர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நான் குறிப்பிட்ட ஆறு அமைச்சர்கள் தவிர, வேறு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அந்த ஆறுபேரும் ஒதுங்கிக்கொண்டால் புதிய ஆட்சி அமைக்கலாம். எம்.எல்.ஏ., க்கள் விரும்பினால், 18 எம்.எல்.ஏ., க்களில் ஒருவரை வைத்து ஆட்சி நடத்துங்கள். விரைவில் தேர்தல் வரும், என்றார்.
சாத்துாரில் அவர் கூறியதாவது:
வேலுாரில்ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். இதற்காக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., எனக்கு ஆதரவு தெரிவித்ததால், அவரது அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும். ‘ஒரு செங்கலை உருவினால் ஆட்சி கவிழாது’ என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். தற்போதே ஆட்சி ஆட்டம் காண தொடங்கி விட்டது. விரைவில் கவிழும்.
ஜெயக்குமார் ஓர் தவளை. அவர் அப்படிதான் பேசுவார். அ.தி.மு.க.,வை எதிர்க்கவே கட்சி துவங்கியதாக கமல் கூறுகிறார். தேர்தலின் போது அவருக்கு தொண்டர்கள் பதிலடி கொடுப்பர், என தெரிவித்துள்ளார்..